சில்லறை பாக்கி தருவதில் தகராறு: நடத்துனரை கடத்திய மர்ம நபர்கள்!

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துனருக்கும் , போதையில் இருந்த பயணி ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கி காயம் அடைந்த நடத்துனர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பேருந்து நடத்துனரை தாக்கி அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சென்ற சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பெண் ஒருவரிடம் பயணச்சீட்டு கொடுத்துள்ளார் நடத்துனர். அப்போது சில்லறை கொடுப்பதில் பெண் பயணிக்கும் நடத்துனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் வாக்குவாதம் முற்றவே பெண் பயணி தனது உறவுக்காரர்களிடம் தொலைபேசியில் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பெண் பயணியின் உறவுக்காரர்கள் 4 நபர்கள் சேர்ந்து நடத்துனரை தாக்கி அங்கிருந்து ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் ஒன்று சேர்ந்து பணிமனையில் இருந்து பேருந்தை எடுக்க மறுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தையால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.