பிரிந்த பெற்றோரை சேர்த்து வைக்க உயிரைவிட்ட பிளஸ்-2 மாணவர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பிரிந்து சென்ற பெற்றோரை சேர்த்துவைக்க மாணவர் உயிரைவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாரைக்கிணறு பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்கிற ரவிச்சந்திரன்(வயது45). டிரைவரான இவர் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மேகலா (40). இவர்களுக்கு நர்மதா என்ற மகளும், தருண் (17) என்ற மகனும் உள்ளனர்.

ரவியும், மேகலாவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரவி தற்போது சிங்களாந்தபுரம் அருகே உள்ள அவையம்பாளையத்தில் உள்ள அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். ரவி மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாவும் இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

தருண் அவரது தாய் மேகலா உடன் வசித்து வருகிறார். மேலும் மெட்டாலா அருகே உள்ள ராசாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து
வந்தார்.

தருணுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இன்று அவர் பள்ளிக்கு சென்று தேர்வு எழுத இருந்தார்.

இதனிடையே தாய், தந்தை இருவரும் பிரிந்து வாழ்வது தருணுக்கு மன அழுத்தத்தை தந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த தருண் இன்று திடீரென வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காலையில் அவனது குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது மாணவன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதனர். இதுபற்றி பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோரை சேர்த்துவைக்க மாணவர் உயிரைவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தருண் தற்கொலை செய்யும் முன்பாக உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் எனது சாவிலாவது பெற்றோர் இணைந்து வாழவேண்டும் என்று உருக்கமாக எழுதி வைத்திருந்தது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.