தமிழ்நாடு ரெடி மிக்ஸ் கான்க்ரீட் நல சங்கம், திடீர் சிமெண்ட் விலை ஏற்றத்திற்காக வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடத்தியது.
கான்க்ரீட் சங்கம் சார்பாக மத்திய அரசிடம் உடனே விலையை குறைக்குமாறு மனு அளித்துள்ளனர். சிமெண்ட் விலையை உடனே குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விலை குறைத்த பின் சிமெண்டிற்காக காத்து கொண்டிருக்கும் தொழிலாளிகளுக்கு அனுப்ப வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா சிமெண்ட் உட்பட பெரிய சிமெண்ட் நிறுவனங்கள் விலையை ஏற்றியுள்ளது. இதன் காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. மற்ற மாநிலங்களில் விலை குறைவாக உள்ள நிலையில், சிமெண்ட் விலை தமிழ்நாட்டில் மட்டும் விலையேறியுள்ளது. நிலக்கரி, டீசல் போன்ற பொருட்கள் விலை இறங்கிய நிலையில், சிமெண்டின் விலை 11.76% சதவீதம் ஏறி 340 என்றிருந்த விலை 380 ஆக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி க்கு பின் விலை இறங்கும் என்று எதிர்பார்த்த கட்டிட தொழிலாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
சில நாட்களுக்கு முன் கோயம்பத்தூரில் கட்டிட தொழிலாளிகள் போராட்டம் நடத்தினர். அவர்களும் தங்களது தரப்பு நியாயத்தை முன்வைத்தனர். சிமெண்ட் விலையேற்றத்தால் ஒரு கோடியே இருப்பது லட்சம் கட்டிட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மாநிலங்களில் இல்லாத விலையுயர்வுக்கான காரணம் என்ன என்பது கட்டிட தொழிலாளிகள் மட்டுமில்லாது பொது மக்களிடமும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.