rajinikanth sir paid my school fees says youth

சென்னை: ரஜினியால் படித்த இளைஞர் ஒருவர் அவர் படங்களுக்கு பேனர், போஸ்டர் டிசைன் செய்கிறார்.

போஸ்டர் மற்றும் பேனர் டிசைன் செய்யும் தொழில் செய்து வருகிறார் மதி. ரஜினிகாந்தின் படங்களுக்கு பேனர், போஸ்டர் வேண்டும் என்றால் ரசிகர்களின் நினைவுக்கு முதலில் வருபவர் மதி. அந்த மதிக்கும், ரஜினிகாந்துக்கும் தொடர்பு உள்ளது. ரஜினி பற்றி மதி கூறியிருப்பதாவது,

ரஜினி
என் குடும்பம் ஏழ்மையானது. என் அம்மா ரஜினி சாரின் வீட்டில் வேலை செய்தார். எனக்கு ரஜினி சார் தான் ஸ்கூல் ஃபீஸ் கட்டினார். என் தாத்தாவும் அங்கு வேலை பார்த்தார். ஜெயலலிதா, ரஜினிகாந்தின் வீடுகள் இருக்கும் பகுதியை சுத்தம் செய்யும் கார்பரேஷன் ஆளாக என் தாத்தா இருந்தார். சில சமயம் அவர் ரஜின்காந்தின் வீட்டிற்குள்ளும் வேலை செய்வார்.

வீடு
ரஜினி சார் பேப்பர் படிக்கம்போது என் தாத்தாவிடம் பேச்சு கொடுப்பார். ஆண்டுதோறும் தீபாவளி அன்று என் மொத்த குடும்பமும் அவர் வீட்டிற்கு செல்வோம். ரஜினி சார் எங்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் கொடுப்பார். ரஜினிக்கு யாரும் தன் காலை தொட்டு கும்பிடுவது பிடிக்காது.

ஒரு முறை போயஸ் கார்டனில் உள்ள அவரின் வீட்டிற்கு முன்பு பெரும் கூட்டம் கூடியது. அதனால் அவர் என் தாத்தாவை அடையாறில் இருக்கும் அவரின் வீட்டிற்கு வருமாறு கூறினார். அவர் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து பென்ஸ் காரில் வந்தார். அவர் காரில் இருந்து இறங்கியதும் அங்கிருந்த சிலர் அவர் காலை தொட்டு கும்பிட்டனர். அதை பார்த்த அவர் என் காலில் விழ வேண்டாம் என்றார்.

லதா அம்மா
ஒரு முறை ரஜினி சார் வீட்டில் இல்லாத நேரத்தில் போயஸ் கார்டன் வீட்டிற்கு நாங்கள் சென்றோம். வாட்ச்மேன் எங்களை கேட்டில் தடுத்து நிறுத்தி காத்திருக்குமாறு கூறினார். நாங்கள் வந்தது குறித்து லதா அம்மாவிடம் தெரிவிக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த லதா அம்மா நாங்கள் நின்று கொண்டிருப்பதை பார்த்து உள்ளே வரச் சொன்னார். மேலும் எங்களை கேட்டில் தடுத்து நிறுத்திய வாட்ச்மேனை விளாசினார்.

மகிழ்ச்சி
நாங்கள் கஷ்டப்பட்டபோது ரஜினி சார் உதவி செய்தார். அவரால் தான் என்னால் நன்றாக படிக்க முடிந்தது. அவர் செய்த உதவிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அவரின் போஸ்டர்கள், பேனர்களை டிசைன் செய்வது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது என்கிறார் மதி.