சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம்? ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் புகுந்து இன்று காலை முதலே சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தனது சொந்த வேலைகள் காரணமாக கார்த்தி சிதம்பரம் லண்டன் புறப்பட்டு சென்றிருந்தார். இந்த நிலையில்தான் அவர் மீது வழக்கு போடப்பட்டு சோதனையும் நடைபெற்று வருகிறது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது 250 சீனர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட இந்த விசாக்களில்தான் முறைகேடு அரங்கேறி இருப்பதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாகவே ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

250 சீனர்களுக்கும் சட்ட விரோதமாக விசா வழங்குவதற்கு கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சென்னையில் 3 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. மும்பையில் 2 இடங்களில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் டெல்லியில் உள்ள சிதம்பரம் வீட்டிலும் சோதனை நடத்தினர். கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் தலா ஒரு இடத்தில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.