ஒத்திவைக்கப்பட்ட போட்டி: தகர்ந்து போன சாய்னா நெவாலின் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கனவு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று பாட்மிண்டன் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தேர்வாக முடியாத நிலை சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் போன்ற பிரபல பேட்மிண்டன் இந்திய வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பிரபல வீராங்கனையான 30 வயது சாய்னா நெவால் 24 சர்வதேசப் போட்டிகளை வென்றுள்ளார். அதில் 11 சூப்பர் சீரிஸ் போட்டிகள். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

தில்லியில் நடைபெற இருந்த இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டி கடந்த மாதம் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. கோலாலம்பூரில் நடைபெற இருந்த மலேசிய ஓபன் சூப்பர் 750 போட்டியும் கொரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்ததை அடுத்து, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, ஜூன் 1 முதல் 6 வரை நடைபெறவிருந்த சிங்கப்பூர் ஓபன் போட்டியும் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மூன்று போட்டிகளையும் வைத்து ஒலிம்பிக் கனவு கொண்டிருந்த வீரர்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

பி.வி. சிந்து, சாய் பிரணீத், ஆடவர் இரட்டையர்கள் சிராக் ஷெட்டி - சாத்விக்சாய்ராஜ் ஆகிய இந்திய பாட்மிண்டன் வீரர்கள் ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்கள். மூன்று போட்டிகளில் பங்கேற்று அதில் கிடைக்கும் வெற்றிகளை வைத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற இருந்தார்கள் இந்திய வீரர்களான சாய்னா நெவாலும் ஸ்ரீகாந்தும். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதிபெறுவதற்காக எஞ்சியிருந்த மூன்று போட்டிகளும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மூன்று போட்டிகளையும் நடத்திக்கொள்ள ஜூன் 15 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் மூன்று போட்டிகளும் தற்போது ஒத்திவைக்கப்பட்டதால் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோரின் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கனவு தகர்ந்து போகியுள்ளது.