சசிகலா- ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட வேண்டும்: தேவர் அமைப்புகள் கடிதம்!!

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது தென் மாவட்டங்களில் உள்ள அவரது ஆதரவாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வில் இருந்து விலக்கப்பட்டதால் அந்த கட்சியில் தங்கள் இனத்துக்கு முக்கியத்துவம் இல்லாத நிலை ஏற்பட்டு இருப்பதாக தென் மாவட்டங்களில் உள்ள தேவர் இன அமைப்புகள் கருதுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஜெயலலிதா ஆட்சியின் போது அவரது தோழியாக இருந்த சசிகலா அதிகார மையமாக வலம் வந்தார். இதனால் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க.வில் முக்கியத்துவம் பெற்று இருந்தனர். தற்போது அத்தகைய நிலை அதிமுகவில் இல்லை.

இதனால் அ.தி.மு.க.வை மீண்டும் முழுமையாக சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அவரது தென்மாவட்ட ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள். இதற்கான நடவடிக்கைகளை சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். 

இந்த கருத்தை வலியுறுத்தி இந்த மாத தொடக்கத்தில் தென் மாவட்ட தேவர் அமைப்புகளில் உள்ள மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது அ.தி.மு.க.வில் தங்கள் அமைப்புகளின் ஆதிக்கம் மீண்டும் இருக்க வேண்டும் என்று ஆலோசித்தனர். இதற்காக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அதில் அந்த அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 100 தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதை கடிதமாக தயாரித்து சசிகலாவிடமும், ஓ.பன்னீர்செல்வத்திடமும் கொடுத்து உள்ளனர். 2 வாரங்களுக்கு முன்பு இந்த கடிதங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.