ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அதிமுகவை காப்பாற்றுங்கள் சின்னம்மா என்ற வாசகங்கள் அடங்கிய பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக பிரிந்து தங்களது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகின்றனர். நாள்தோறும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் பேசியது ஒற்றைத்தலைமை மோதலை அதிகரித்துள்ளது.

அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பு யாருக்கு என்பதில் ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அணிகள் இடையே மீண்டும் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், ஒரு தரப்பினர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவை தலைமையேற்று வழிநடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் அதிமுக முன்னாள் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெ.ஆர். சுரேஷ் ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ்.சை எதிர்த்தும், சசிகலாவுக்கு ஆதரவாகவும் பேனர் ஒன்றை வைத்துள்ளார்.அந்தப்பேனரில் “தமிழக தேர்தல்களில் அ.தி.மு.க. அழிய காரணமானவர்களே. சின்னம்மா இல்லேன்னா உங்களுக்கு பதவி? பாராட்டா? அ.தி.மு.க.வை அழித்தது போதும் உங்களுக்கு டாடா. வாருங்கள் சின்னம்மா காப்பாற்றுங்கள் அ.தி.மு.க.வை என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பேனரை வைத்துள்ளது மதுரையின் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.