உடல் நலம் குன்றிய விமானி...  விமானத்தைத் தரை இறக்கிய பயணிகள்... திக் திக் நிமிடங்கள்!!

விமானத்தின் பைலட்டுக்கள் கொலை செய்யப்பட்டு அல்லது சிறை வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான நேரத்தில் ரத்தம் சிந்தச்சிந்த ஹீரோக்கள் விமானங்களை லேண்ட் செய்த கதைகளைக் பல ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போம்.

ஆனால் இங்கு நிஜத்திலேயே இரு பயணிகள், விமானத்தை மிக அருமையாகத் தரையிறக்கிப் பல பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் நிகந்துள்ளது.

இந்த சம்பவம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் (10 மே) செவ்வாய்க்கிழமை மதியம் நடந்ததாக அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு கூறியுள்ளது.

ஒற்றை இன்ஜின் கொண்ட செஸ்னா 208 என்கிற விமானத்தின் விமானிக்கு செவ்வாய்க்கிழமை பறந்து கொண்டிருக்கும் போது திடீரென கடும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவரால் விமானத்தை இயக்க முடியாத அளவுக்கு மோசமாகப் பாதிக்கப்பட்டார்.

அவ்விமானத்தில் பயணித்த இரு பயணிகள் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விஷயத்தை விளக்கினர். விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் விமானம் பறந்து கொண்டிருக்கும் இடம் போன்ற அடிப்படை விவரங்களைக் கேட்ட போதும், அப்பயணிகளுக்கு முழு விவரங்களும் தெரியவில்லை.

அப்பயணிகள் ஃப்ளோரிடா கடற்கரையை மட்டுமே பார்க்க முடிவதாகக் கூறினர்.

கடற்கரையைத் தொடர்ந்து வடக்கு நோக்கி அல்லது தெற்கு நோக்கிப் பயணிக்குமாறு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டறை அதிகாரிகள் கூறினர். சுமார் 4 நிமிடத்துக்குப் பிறகு, செஸ்னா 208 விமானம் போகா ரடோன் (Boca Raton) பகுதியில் பறந்து கொண்டிருப்பதாகக் கண்டுபிடித்தனர்.

இதன் பிறகு தான் நிலைமை இன்னும் தீவிரமடைந்தது. இப்போது அவ்விமானத்தைத் தரையிறக்குவதற்கான படிநிலைகளை ஒவ்வொன்றாக முன்னனுபவம் எதுவும் இல்லாத அந்த இரு பயணிகளிடமும் ஒவ்வொன்றாக விளக்கியது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டறை.


விமானத்தின் இறக்கைகளின் நிலையை ஒரே அளவில் வைத்துக் கொள்ளுங்கள்... மெல்ல விமானத்தின் உயரத்தைக் குறைத்துக் கொண்டே வாருங்கள்... இப்போது மெல்ல விமானத்தைத் தரையிறக்குங்கள் என... ஒவ்வொன்றாகக் கூறினர்.

அந்த இரு பயணிகளும் அதிகாரிகள் கூறியதை அப்படியே செய்து வந்தனர். விமானம் அத்தனை பிரமாதமாகத் தரையிறக்கப்பட்ட காட்சிகள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி "விமான பயணிகள் ஒரு விமானத்தைத் தரையிறக்கிய ஆச்சரிய நிகழ்வை இப்போது நாம் பார்த்தோம்" என மகிழ்ந்து பாராட்டினார்.