விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்'- ஜெயக்குமார் காட்டம்

திமுக அமைச்சர்களிடமும் நிர்வாகிகளிடமும் மரியாதையை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஜனநாயகவாதிகள் அல்ல, ஜமீன்தார்கள். கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றுவார்கள்' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார்.

நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட இன்று வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகத்தை அதிகப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகிறது. அதுமட்டுமா? எத்தனையோ திட்டங்கள் இருக்கும்போது, பழமையான கிழக்கு கடற்கரை சாலைக்கு ஏன் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும்? காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட ஈசிஆர் என்றால் தெரியும் மக்களுக்கு தெரிந்த புகழ்பெற்ற சாலை ஈசிஆர் சாலை. அப்படிப்பட்ட இடத்துக்கு ஏன் பெயர் மாற்ற வேண்டும்? கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு எனக்கூட மாற்றிவிடுவார்கள். இருந்தபோதிலும் மறைந்த தலைவர்களை கொச்சைப் படுத்தக்கூடாது என்பதால் சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரை சூட்டுவதை கொச்சைப்படுத்த விரும்பவில்லை.

தமிழ்நாட்டை பொறுத்தவரை மு.க ஸ்டாலினின் மருமகன் சபரீசன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தான் நிழல் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார்கள். கனிமொழிக்கு எந்த வேலையும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் கொடி கட்டிய நபர் கூட பதவியில் அமர முடியும். ஆனால் திமுகவில் நேரு, பொன்முடி போன்றவர் ஸ்டாலினுக்கு அடுத்து வர முடியுமா என கேள்வி எழுப்பினார்.