எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர் வீட்டில் ஐடி ரெய்டு!

அதிமுக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர் சந்திரசேகர் வீட்டில் இன்று (ஜூலை 6) வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

2016-2021 அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை 2 முறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது அவரது ஆதரவாளரான சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இன்று மூன்றாவது முறையாக அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக சந்திரசேகர் இருந்து வருகிறார். நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளராகவும் உள்ளார். இவரது, வீடு கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு 8 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை 9 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு ஆவணங்களைக் கேட்டு அவர்கள் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் சந்திரசேகரின் வீடு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.