அமெரிக்கா புறப்படும் சூப்பர்ஸ்டார்!!

நடிகர் ரஜினிகாந்த் இந்த வருடத்திற்கான தனது உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த சில வருடங்களாக தனது முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரஜினி. அங்கு சில நாட்கள் தங்கி இருந்து தனது அமெரிக்க நண்பர்களையும் அங்குள்ள ரசிகர்களையும் சந்திப்பது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருடம் அமெரிக்கா செல்ல இருக்கிறார் ரஜினிகாந்த். ‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் தனது 169வது படத்தை உறுதி செய்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். இதன் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பு ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட இருக்கிறார். ரஜினியுடன் அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் செல்ல இருக்கிறார். குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அங்கு தங்கி இருப்பார் என சொல்லப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லும் போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகும். அந்த வகையில் இந்த முறையும் நல்லபடியாக தனது உடல் பரிசோதனையை முடித்து கொண்டு ரஜினி திரும்ப வேண்டும் என ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.