ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள சீக்கிய வழிபாட்டு தளத்தில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதனை அடுத்து சீக்கிய குருத்வாரா மறுசீரமைப்பு செய்ய தலீபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் தலீபான்கள் சிறுபான்மையினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நிலைமை சீராகி விட்டதாகவும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் உட்பட மதச் சிறுபான்மையினர் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சீக்கிய குருத்வாரா தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட குழு குருத்வாராவுக்கு சென்று அங்கு காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தனர். சேத விவரத்தை கணக்கிட ஒரு தொழில்நுட்ப குழுவும் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆப்கான் அரசு 7.5 மில்லியன் ஆப்கானி தொகையை குருத்வாரா சீரமைப்புக்கு வழங்கும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த ஜூன் 18 அன்று ஐஎஸ்கேபி பயங்கரவாத குழு காபுலில் உள்ளகர்தே பர்வான் குருத்வாராவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரு சீக்கியர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அரசின் உயர்மட்ட அதிகாரி, இந்து மற்றும் சீக்கிய கவுன்சில் பிரதிநிதிகள் உடன் ஆலோசனை நடைபெற்றது. கடந்த 24ஆம் தேதி இக்கூட்டம் நடைபெற்றது. அதில் இப்போது ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ள சிறுபான்மையின மக்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இங்கு பாதுகாப்பு பிரச்சனைகள் சமரசம் செய்து கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.