தாமிரபரணி படுகொலை- கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்களை அடித்தே கொன்ற திமுக அரசு

கடந்த 19 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்படமுடியாத தினமாக நிலைபெற்றுவிட்டது, கூலிஉயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 தொழிலாளர்களை, திமுகவால் ஏவப்பட்ட காவல்துறையினர் அநியாயமாக அடித்துக்கொன்ற தாமிரபரணி நினைவு தினம் ஜூலை 23.

1930-இல் சிங்கம்பட்டி ஜமீன்தார், தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் நிலத்தை, 99 வருட குத்தகை ஒப்பந்தம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தார். அந்த காடுகள்தான் மாஞ்சோலை எஸ்டேட்டாக பின்னர் மாறியது. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் புதர்காடுகளை மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகளாக உருவாக்கிய பெருமை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பட்டியலின தேவேந்திர குல மக்களையே சாரும்.

1948 ஆம் ஆண்டின் இரயத்துவாரி நில ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. ஆனால் பிபிடிசி நிறுவனமோ, அப்போதைய தமிழக காங்கிரஸ் அரசுடன் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டு தனது குத்தகை காலத்தைத் 2029 வரை புதுப்பித்துக் கொண்டது. 
53 ரூபாய் மட்டுமே நாள் ஒன்றுக்கு கூலியாக பெற்றுவந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த கூலி உயர்வு கேட்டு எஸ்ட்டேட்டுக்கு எதிராக போராடினர். போராடியவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். 

அப்போதைய ஆளும் தி.மு.க. அரசோ தொடர்ந்து எஸ்டேட் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் 47 நாட்களாக கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டுள்ள 653 தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரியும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்னிறுத்தி 23.07.1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. 

பல்வேறு பகுதி மக்களுடன், தமிழ் மாநில காங்கிரஸ், அய்க்கிய ஜமாத், சி.பி.அய்., சி.பி.அய்(எம்), உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து தாமிரபரணி நதிக்கரையில் பேரணி சென்றார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டதை பொறுக்க முடியாத ஆளும் வர்க்கம், லட்சக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியாக புதிய தமிழகம் என்ற கட்சியின் பின்னால் அணி திரள்வதை சகித்துக் கொள்ள முடியாத அதிகார வர்க்கம் காவல்துறையின் மூலமாக கலவரத்தை ஏற்படுத்தியது.

பேரணியை வழிநடத்திவந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். க.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்க்குள் சென்று மனு கொடுப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

அப்போதைய ஆளும் தி.மு.க.வால் திட்டமிட்டே குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று வன்முறையில் இறங்கினர். காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடினார்கள். உயிர் தப்பிக்க ஓடிய மக்கள், காவல்துறையால் தாமிரபரணி ஆற்றுப் பக்கமாக குறி வைத்து தள்ளப்பட்டனர். தாமிரபரணி நதிக்குள் குதித்தவர்களையும் விரட்டி விரட்டி அடித்தது காவல்துறை. இக்கொடுமைகளைப் படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் தாக்கினர். 

ஒன்றரை வயதேயான சிறுவன் விக்னேஷ் உள்ளிட்ட 17 பேர் அநியாயமாக அடித்தே கொலை செய்யப்பட்டனர். நீதி கேட்டுப் போராடியவர்கள் படுகொலை செய்யப்பட்ட அரச பயங்கரவாதம் அரங்கேறியது. இப்படுகொலை நடந்த சில நாட்களில் தினக்கூலி 150 ரூபாயாக உயர்த்தப்பட்டது. சிறைக்கு சென்ற அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். 

இந்த பயங்கரம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் என்ற ஒன்றை ஒப்புக்கு அமைத்தது திமுக அரசு. பதினோரு மாத விசாரணைக்குப் பின்பு 27.06.2000 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் நீதிபதி மோகன், ”பேரணிக்கு வந்திருந்தவர்கள் தங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு ஆற்றில் விழுந்து விட்டனர். நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட இறப்புகள் சந்தேகத்திற்க்கு இடமின்றி விபத்து தான்” என்று தீர்ப்பு வழங்கினார். 

அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி மோகன் கமிசன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்த போது அந்த அறிக்கையை சட்டசபையிலேயே கிழித்தெறிந்து போர்குரல் எழுப்பினார் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். க.கிருஷ்ணசாமி.
 
தனது கணவர் மாரியப்பன் உள்ளிட்டோரின் விடுதலைக்காக கைக்குழந்தையுடன் போராடிய ரத்தினமேரி அவரது பச்சிளம் குழந்தை விக்னேஷ் உடன் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டது இன்னமும் தமிழக மக்களை விட்டு நீங்காமல் உள்ளது. படுகொலையை மறவாத மக்கள் வருடாவருடம் #தாமிரபரணி_படுகொலை ஹேஷ்டேக்கினை பதிவு செய்து வருகின்றனர்.