சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில் நடிகர் கதிரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.
சர்கார் படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார் விஜய். ஏற்கனவே விஜய் - அட்லீ கூட்டணி தெறி, மெர்சல் என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்திருப்பதால், இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 21ம் தேதி படப்பிடிப்பு துவங்குகிறது.
கதிர்:
இந்நிலையில், இப்படத்தில் பரியேறும் பெருமாள் படத்தில் நாயகனாக நடித்த கதிரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இத்தகவலை கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் புரொடக்ஷன் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
மிகவும் மகிழ்ச்சி:
இது தொடர்பாக நடிகர் கதிர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அதிகாரப்பூர்வமாக தளபதி 63ல் நான். எனது கனவு புராஜக்ட் இது. இதனால் பெருமையாக, மிகவும் சந்தோசமாக உணர்கிறேன். நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ என எல்லோருக்கும் என் நன்றிகள். இதைவிட 2019 சிறப்பாக இருக்க வாய்ப்பில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.