மாயமான மனைவி... கோடிகளை செலவு செய்து தேடிய கணவன் - காதலருடன் ஓட்டம் பிடித்தது அம்பலம்

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சாய் பிரியா. 24 வயது சாய் பிரியாவுக்கும் அவருடைய உறவினரான சீனிவாஸ் என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. சீனிவாஸ் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். எனவே, இரண்டு பேரும் ஹைதராபாத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நான் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க வேண்டும் என்று கணவனிடம் கூறிய சாய்பிரியா விசாகப்பட்டினத்திற்கு வந்தார். அவரை தொடர்ந்து சீனிவாஸ் விசாகப்பட்டினம் வந்தடைந்தார். கடந்த திங்களன்று இரண்டு பேரும் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரைக்குமாலை வேளையில் சென்று இருந்தனர்.

அப்போது சீனிவாசுக்கு அவருடைய நண்பரிடம் இருந்து செல்போனில் அழைப்பு வந்தது. நண்பருடன் செல்போனில் பேசிய பின் தேடி பார்த்தபோது சாய்பிரியாவை காணவில்லை. கடலில் தண்ணீருக்கு மிக அருகில் இரண்டு பேரும் இருந்தபோது சீனிவாசுக்கு செல்போன் அழைப்பு வந்தது, சாய்பிரியா காணாமல் போனது ஆகியவற்றின் காரணமாக அவர் கடலில் விழுந்து இருக்கலாம் என்று சீனிவாஸ் கருதினார்.

பல இடங்களில் தேடிப் பார்த்தும் சாய்பிரியாவை காணவில்லை. இது பற்றி சீனிவாஸ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த விசாகப்பட்டினம் போலீசார் கடலோர காவல் படையினருக்கு தகவல் அளித்து சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்து சாய்பிரியாவை ஹெலிகாப்டர் மூலமும் வேறு வகைகளிலும் இரண்டு நாட்களாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சாய்பிரியா நெல்லூரில் இருப்பதை பார்த்த அவருடைய உறவினர் சீனிவாசுக்கு தகவல் அளித்தார். இது பற்றி சீனிவாஸ் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த விசாகப்பட்டினம் போலீசார் சாய்பிரியாவை நெல்லூரில் இருந்து விசாகப்பட்டினம் அழைத்து சென்றனர்.

சாய்பிரியாவிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது அவர் திருமணத்திற்கு முன்னரே நெல்லூரை சேர்ந்த ரவி என்பவரை காதலித்து வந்ததும், திருமணத்திற்கு பின்னரும் கூட அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்ததும் தெரிய வந்தது.

கணவனுடன் வாழ பிடிக்காமல் திட்டம் போட்டு ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் வந்து அங்கிருந்து கணவனை ஏமாற்றி ரவியுடன் சேர்ந்து சாய்பிரியா நெல்லூருக்கு வந்ததும் தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.