கே.எல்.ராகுல் விளையாடியதிலேயே சிறந்த இன்னிங்ஸ் இதுதான் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. இதைத்தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ஆட்டத்தில் அதிரடி காட்டிய ரோகித் சர்மா, அரைசதம் விளாசி அசத்தினார். 83 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் அந்நிய மண்ணில் ஆறு ஆண்டுகளுக்குப் பின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார் ரோகித் சர்மா. மறு முனையில் நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினார்.

இது குறித்து பேசிய ரோகித் சர்மா "கே.எல்.ராகுல் விளையாடியதிலேயே சிறந்த இன்னிங்ஸ் இதுவாகத்தான் இருக்கும். முதல் பந்தில் இருந்தே ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். நேற்றைய ஆட்டநேரம் முடியும் வரை ராகுலின் கவனம் சிதறவில்லை. அவரின் திட்டத்தை செயல்படுத்துவதில் கவனத்துடன் இருந்தார். நீங்கள் உங்கள் திட்டத்தில் சரியாக இருந்தால் அதனை முழுமையாக நம்ப வேண்டும். அப்போதுதான் அது சரியான முறையில் செயல்பாட்டுக்கு வரும்" எனத் தெரிவித்தார்.மேலும் பேசிய அவர் "ராகுலுக்கு இந்த நாள் அவருக்கானதாக அமைந்துவிட்டது. அதனை திறமையாக செய்தார் அவர். ராகுலின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. என்னுடைய சிறந்த பேட்டிங் இதுவென்று நான் சொல்லமாட்டேன். ஆனால் லார்ட்ஸ் சூழலில் விளையாடியது சவாலானதாகவே இருந்தது. தொடக்கத்தில் இருந்து நல்ல முறையில் ரன்களை சேர்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் ஆட்டமிழந்தது மிகவும் வருத்தத்தை அளித்தது" என்றார் ரோகித் சர்மா.