புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் நினைவு தினம் இன்று

திரைத்துறையிலும், அரசியலிலும் முத்திரை பதித்து இன்றளவும் மக்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்திருப்பவர் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவரது 33 வது நினைவு நாளான இன்று அவரைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு

ரசிகர்களின் ஆரவாரத்தையும், கைத்தட்டலையும் பெற்ற நாடோடி மன்னன் திரைப்படத்தின் ஒரு காட்சிதான் இது. 

கொள்கை முழக்கம், அனல் பறக்கும் வசனங்கள், ஆழ்ந்த கருத்துகள், இனிமையான பாடல்கள் மூலம் மக்களின் வரவேற்பைப் பெற்றவை எம்.ஜி.ஆரின் படங்கள்.லட்சக்கணக்கான ரசிகர்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன்வயப்படுத்தி வைத்துள்ளார் எம்.ஜி.ஆர். உழைக்கும் மக்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோரின் உழைப்புக்கு மரியாதை செலுத்தின எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள். தாயின் மீது தனித்த அன்பும், மரியாதையும் கொண்ட எம்.ஜி.ஆர். தமது திரைப்படங்களிலும் தாயின் பெருமைகளை உணர்த்தினார்

பெண்கள் மீதான எம்ஜிஆரின் உயர்ந்த கருத்துகளுக்கு தாய்க்குலம் ஆரத்தி எடுத்து கொண்டாடிய காலங்கள் உண்டு. குழந்தைகள் மீது மிகுந்த பிரியமுடைய எம்ஜிஆரின் படங்களுக்கு குழந்தை ரசிகர்களும் ஏராளம். நல்ல பல கருத்துக்களை, அவரது படங்களில் சொல்லத் தவறியதேயில்லை. இளம் வயது முதலே எம்.ஜி.ஆரின் இயல்பிலும் சுபாவத்திலும் இருந்த கருணை குணம், துணிச்சல், சிந்தனைத் தெளிவு போன்றவைதான் அரசியலுக்கு வர அடித்தளமாக அமைந்தன.

பத்தாண்டுகளுக்கும் மேல் முதலமைச்சராகப் பதவி வகித்தபோது, ஏழை எளிய மக்களின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையால் எத்தனையோ நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார் எம்.ஜி.ஆர்.  இளம் வயதில் பசியிலும் வறுமையிலும் தான் வாடியதுபோல், பிள்ளைப் பிராயத்தில் யாரும் பசியோடிருக்கக் கூடாது என்பதற்காக அவர் அமல்படுத்தியதுதான் சத்துணவுத் திட்டம். நடிகராகவும், அரசியல் கட்சித் தலைவராகவும், முதலமைச்சராகவும் கோலோச்சியவர் அவர்.

இவ்வுலகைவிட்டு மறைந்து 33 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும், என்றும் தமிழக மக்கள் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார் எம்.ஜி.ஆர்.