கடனை கட்ட முடியவில்லை: கடிதம் எழுதி வைத்துவிட்டு கேரள தம்பதியர் எடுத்த விபரீத முடிவு

பழனியில் தனியார் தங்கும் விடுதியில் கடன் தொல்லை காரணமாக கேரளாவைச் சேர்ந்த தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று கேரளாவைச் சேர்ந்த சுகுமாரன் - சத்தியபாமா தம்பதியர், அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சாமி தரிசனம் செய்ய வந்திருப்பதாகக் கூறி அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அந்த தனியார் விடுதி முன்பு கேரள தம்பதியினரின் உறவினர்கள் அழுது கொண்டே வந்தனர். அப்போது விடுதியில் வேலை செய்பவர் என்ன நடந்தது என்று கேட்டபோது, எங்கள் உறவினர்கள் விடுதியின் முன்பக்கம் புகைப்படம் எடுத்து பழனியில் இந்த விடுதியில் தங்கி இருப்பதாகவும், தாங்கள் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் எங்களுக்கு தொலைபேசியில் தகவலை அனுப்பி வைத்தனர் என்று கூறி கதறினர்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அறை உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கியபடி இருந்தனர். இதைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார், பிரோத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எங்கள் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. நாங்கள் வங்கியில் வாங்கிய கடனை எங்களால் திருப்பி செலுத்த முடியவில்லை என எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.; இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.