இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம். இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் பிக்பாஸ் ஷிவானி நாராயணன், நரேன் காளிதாஸ், ஜெயராம், தொகுப்பாளினி மகேஸ்வரி, மற்றும் மைனா நந்தினி உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், சில காட்சிகள் மட்டும் மீண்டும் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்தப் படப்பிடிப்பும் ஒரு சில நாட்களில் நிறைவு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்ஜெய்ண்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற இருப்பதால், படத்தின் அப்டேட்டுகளும் நாளுக்கு நாள் ரிலீஸாகிக் கொண்டே இருக்கின்றனர்.
இந்நிலையில் தான் நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து படக்குழு ரகசியம் காத்து வந்த நிலையில், சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. கமல்ஹாசனும், நடிகர் சூர்யாவும் விக்ரம் செட்டில் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும் வீடியோ வெளியானதை பார்த்ததும் ரசிகர்கள், யூகத்தை உறுதி செய்துள்ளனர்.
இளம் வயது கமல்ஹாசன் போன்ற சிறப்புத் தோற்றத்தில் சூர்யா நடித்திருக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.