செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் – உறுதி செய்த விஞ்ஞானிகள்!

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான முகாந்திரம் உள்ளதா என பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை சீன விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்காவின் நாசா செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதைக் கண்டறிந்துள்ள நிலையில், சீனாவின் சார்பில் அனுப்பப்பட்ட ஜுராங் ரோவர் செவ்வாய் கிரகத்தில் எதிர்பார்த்ததை விட குறைந்த ஆழத்திலேயே தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது.

முன்னதாக,மே 15, 2021 அன்று செவ்வாய் கிரகத்தின் வடக்கு அரைக்கோளத்தில் உடோப்பியா ப்ளானிட்டியா (Utopia Planitia) எனப்படும் ஒரு பெரிய சமவெளியில் ஜுராங் ரோவர் (Zhurong Rover) தரை இறங்கியது. மூன்று மாதங்கள் நீடித்த ரோவரின் முதன்மை பணி, செவ்வாய் கிரகத்தின் பண்புகளை அறிந்து கொள்வதாகும்.

அதன்படி, செவ்வாய் கிரகத்தின் வடக்கில் தாழ்வான நிலங்களில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்குப் படுகையின் ஒரு பகுதியாக இருக்கும் சமவெளியில் உள்ள கனிமங்கள், சுற்றுச்சூழல், நீர் மற்றும் பனியின் சுவடுகள் ஆகியவற்றை ரோவர் ஆய்வு செய்து, கிரகத்தைச் சுற்றி வரும் டியான்வென்-1 ஆர்பிட்டருக்கு தகவல்களை அனுப்பி வருகிறது.

இதன்மூலம், செவ்வாய் கிரகத்தின் ஹெஸ்பெரியன் காலத்தில் சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகம் சூடாகவும் ஈரமாகவும் இருந்ததாகவும், ஆனால் பல ஆண்டுகளாக மாற்றம் ஏற்பட்டு கிரகம் இன்று வறண்ட, உறைந்த பாலைவனமாக மாறியதாக பல விஞ்ஞானிகள் நம்பிய நிலையில்,செவ்வாய் கிரகத்தின் உட்டோபியா பிளானிஷியா படுகையில் வெறும் 700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் இருந்ததாகவும், அவை தற்போது உப்பு தாதுக்களின் வடிவத்தில் உள்ளன எனவும் ரோவரின் ஆரம்ப ஆய்வில் இருந்து கிடைத்த தகவல்கள் உறுதி படுத்தியுள்ளன.