வைகோவையே தூக்கி எறிந்தோம் – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆர்.எஸ் பாரதி

திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்தது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கருத்து தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் இருந்து யார் போனாலும் கவலையில்லை என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். சென்னை திருநின்றவூரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற அவரிடம், திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, சமீபத்தில் பாஜகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து பேசிய அவர், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் போனபோதே நாங்கள் கவலைப்படவில்லை என்றும் வைகோவையே தூக்கி எறிந்தோம் எனவும் பகிரங்கமாக தெரிவித்தார்.

இதனால் யார்போனாலும் கவலை இல்லை. திராவிட முன்னேற்ற கழகம் தேம்ஸ் நதி போல், men may come and men may go but we go on for ever என்று கூறிய ஆர்எஸ் பாரதி, யார் வந்தாலும் யார் போனாலும் அதை பற்றி கவலையில்லை. தேம்ஸ் நதியை போல் திமுக சென்றுகொண்டியிருக்கிறது. தற்போது 70 ஆண்டுகளாக கடந்து செல்லும் திமுக 100 ஆண்டுகளுக்கு மேல் சென்று கொண்டியிருக்கும் என்றார்.

இதனிடையே, எம்பி திருச்சி சிவா மகன் சூர்யா சிவா சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதுகுறித்து பாஜகவை சேர்ந்த நிர்மல் குமார், திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா “திமுக குடும்ப கட்சி பிடியில் உள்ள நிலையில், ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய விருப்பம்” என தெரிவித்து பாஜகவில் இணைந்தேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.