கலவர வழக்கில் கைது செய்யப்படுவாரா ராஜபக்சே?

மே 9 ஆம் தேதி மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த தருணத்தில், பிரதமர் வீட்டின் முன்பு அமைதியான முறையில் போராடிய பொதுமக்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்களால் கொடூரமான வன்முறை ஏவி விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலவரம் உருவானது.

போராட்டக்காரர்களின் கூடாரங்கள் தீ வைக்கப்பட்டன. அலரி மளிகையில் வெடித்த இந்த வன்முறை தீ இலங்கை முழுவதும் பரவியது.

தற்போது மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இல்லாத நிலையில்... கிரிமினல் மிரட்டல் மற்றும் அமைதியான முறையில் போராடிய மக்களை தாக்க சதித் திட்டம் தீட்டிய வழக்கில் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட 7 பேரை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடக் கோரி கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.

கொழும்பு, புதுக்கடை வீதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சேனக பெரேரா தனிப்பட்ட முறைப்பாடாக இந்தப் புகாரை அளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சஞ்சீவ எதிரிமான்ன, சனத் நிஷாந்த மற்றும் மொரட்டுவை மாநகர சபையின் தலைவர் சமன் லால் பெர்னாண்டோ, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த போலீஸ் அதிகாரி தேசபந்து தென்னகோன் மற்றும் போலீஸ் அதிகாரி சந்தன விக்கிரமரத்ன ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.

இந்த மனு நேற்று (13) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் நீதிபதி திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த மனுவை எதிர்வரும் மே மாதம் 17 ஆம் தேதி கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.
கிரிமினல் மிரட்டல் மற்றும் அமைதியாக போராடிய மக்களை தாக்க சதித் திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மகிந்த ராஜபக்சே மீது தொடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்... வரும் 17ம் தேதி கொழும்பு முதன்மை நீதிமன்றம் ராஜபக்சேவை கைது செய்ய உத்தரவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு இலங்கையிலும் தமிழகத்திலும் ஏற்பட்டுள்ளது.