வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் அதிமுக, பாஜக மற்றும் பாமக இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளனர். சற்று நேரத்திற்கு முன், சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் இரு கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் உடனிருந்தனர். பாமக கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் ஜி.கே.மணி கையெழுத்திட்டார். பாமக கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று மதியம் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசவிருக்கிறார். விஜயகாந்தும் கூட்டணிக்கு உடன்படும் நிலையில், அதிமுக - பாஜக - தேமுதிக - பாமக என்ற மெகா கூட்டணி தமிழகத்தில் உருவாகும்.
தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிக கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் 5 முதல் 7 தொகுதிகள் அவர்களுக்கு ஒதுக்கப்படும். பாஜகவுக்கும் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் அதிமுக 20 முதல் 22 தொகுதிகளில் போட்டியிடும். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து மற்ற கட்சிகளின் ஆதரவை இடைத்தேர்தலில் பெறவேண்டியே அதிமுக, கூட்டணி கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பாமக தங்களது ஆதரவை அதிமுகவிற்கு அளிக்கவுள்ளதாக அக்கட்சி சார்பில் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதே போல் தேமுதிக கூட்டணி உறுதியாகும் நிலையில் அவர்களும் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்புள்ளது. எம்.பி க்களை விட, ஆட்சியை தொடர எம்எல்ஏ க்களே அதிமுகவிற்கு தேவைப்படுகிறது என்பது ஒத்துக்கொள்ளவேண்டிய விஷயமாகும்.