நடிப்பின் இலக்கணம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று!!!

தமிழ் திரையுலகில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்து எல்லோராலும் நடிகர் திலகம் என போற்றப்படும்  சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

கோலிவுட்டில் இன்றும் கோடம்பாக்கத்தை நோக்கி நடிப்பு கனவுகளோடு படையெடுக்கும் பலருக்கும் முன்னோடி வழிகாட்டி என அனைத்துமாகவும் இருப்பவர் சிவாஜி கணேசன். 1928ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தஞ்சாவூரில் கணேசனாக பிறந்த இவர், இளம் வயது முதலே நடிப்பின் பால் ஈர்க்கப்பட்டு மேடை நாடகங்களில் எல்லா விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தார்.ஒருமுறை "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த இவரது நடிப்புத்திறனை பார்த்து வியந்த தந்தை பெரியார், 'சிவாஜி' கணேசன்' என்று மேடையில் அழைத்தார். அன்று முதல் சிவாஜி கணேசன் என்றே மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார்.

1952ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் உருவான பராசக்தி திரைப்படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமானார் சிவாஜி. ஆழமான வசனங்களும் சிவாஜியின் ஒப்பற்ற நடிப்பும் ஒரே படத்தில் இவருக்கு மாபெரும் கலைஞன் எனும் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. சிவாஜி கணேசனின் முகம் மட்டுமல்லாது கை, கால் ஏன் நகம் கூட நடிக்கும் என்று சொல்லும் அளவு தமிழில் நடிப்புக்கென்று புது இலக்கணத்தை வகுத்தவர் அவர்.திரையில் சிவாஜி ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை எனலாம். அதனாலேயே காலப்போக்கில் நடிப்புச் சக்ரவர்த்தி என்றும் நடிகர் திலகம் என்றும் எல்லோராலும் பாராட்டப்பட்டார்.செவாலியர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் சிவாஜி கணேசன் தான். அதோடு கலைமாமணி விருது, பத்ம விருதுகள், தாதாசாகெப் பால்கே விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரான இவர், நடிப்பு எனும் கலையின் ஒவ்வொரு கலைஞர்களின் மனதில் என்றென்றும் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்.

Sivaji Ganesan, Parasakthi, Sivaji Ganesan Birthday, Prabhu, Devar Magan, Padayappa