'Silk' Smitha

1960-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 தேதி ஆந்திராவில் பிறந்து தெலுங்கை தாய்மொழியாக கொண்ட நடிகை ‘சில்க்’ ஸ்மிதா. ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் சில்க் என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததால் அது முதல் ஸ்மிதா என்ற பெயரில் ‘சில்க்’ என்ற அடைமொழி சேர்த்து ‘சில்க்’ ஸ்மிதாவாக வலம் வந்தார். தனது கவர்ச்சி நடனத்தால் இளைஞர்களை கட்டி இழுத்தார். தனது குடும்ப வறுமை காரணமாக தான் சினிமாவில் கவர்ச்சி நடனமாடினார். இளைஞர்களின் மனதில் கவர்ச்சி கன்னியாக இன்றுவரை இருந்து வருகிறார்.

‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவர்ச்சி நடிகை என்கிற பெயரிலிருந்து சிறந்த நடிகை என்று அனைவரையும் புருவம் உயர்த்தி ஆச்சரியப்பட வைத்தார். அதுமுதல் மேலும் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது அந்தஸ்தை உயர்த்தினார். சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வெற்றிகொடி நாட்டினாலும், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் மிகுந்த துயரத்திற்கு ஆளாக்கப்பட்டார். கவர்ச்சி நடனமாடுவதால் அவரின் குடும்பத்தார் அவரை அறுவருப்பாக பார்த்தனர். அவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரம் மிகவும் குறைவு. அவரைப் பற்றி பலரும் தவறாகவே கருதி வந்தனர். ஆனால், அவர் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்.

அவரது குணம் குழந்தையைப் போன்றது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியிருக்கிறார்கள். ஏதோ காரணத்தால் 1996 ஆம் வருடம் தற்கொலை செய்து கொண்டார். அவர் மறைந்த பிறகு இன்று வரை அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அவரது வாழ்க்கையை ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தனர். அதில் ‘சில்க்’ ஸ்மிதாவாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார்.

அவர் மறைந்தாலும் ரசிகர்கள் இன்றுவரை அவரை மறக்கவில்லை. பலரும் தங்களது சமூக வலைதளங்களில் அவரது பிறந்தநாளை நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

Silk Smitha, Vandi chakaram, Idam Dance, Cabaret Dance,