டெல்லி: எங்களது 43 ஆண்டுகால நட்பின்போது பிரதமர் நரேந்திர மோடி டீ விற்று நான் பார்த்ததே இல்லை என விஷ்வ இந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகடியா தெரிவித்துள்ளார். அந்தர் ராஷ்ட்ரீய இந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகடியா. இவர் கூறுகையில் மோடியின் அறிக்கைக்கு பிறகு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ராமர் கோயில் கட்டப்படாது என ஆர் எஸ் எஸ் தலைவர் பய்யாஜி ஜோஷி கூட தெளிவாக கூறிவிட்டார்.
முத்தலாக்
பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் 125 கோடி இந்தியர்களை இருட்டில் வைத்திருந்தது. ஆனால் தற்போது நாட்டின் இந்துக்கள் விழித்து கொண்டனர். முத்தலாக்கை கொண்டு வந்ததன் மூலம் எரியும் கொள்ளியில் எண்ணெய்யை மோடி ஊற்றிவிட்டார்.
காணாமல் போய்விடும்
மோடியை இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வு செய்தாலும் அவர் ராமர் கோயிலை கட்ட எந்த வித முயற்சியையும் அளிக்க மாட்டார். ராமர் கோயில் கட்டி முடித்துவிட்டால் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகிய இரு கட்சிகளுக்கு வேலை இல்லாததால் அவை காணாமல் போய்விடும்.
43 ஆண்டுகள்
எனவேதான் ராமர் கோயில் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வராமல் பதற்றமான சூழலிலேயே வைத்துள்ளனர். மோடியுடன் நான் 43 ஆண்டுகள் நட்புடன் இருந்தேன்.
பார்த்ததில்லை
இதில் ஒரு முறைகூட அவர் டீ விற்று நான் பார்த்ததே இல்லை. எல்லாம் மக்களின் அனுதாபத்தை பெறவே மோடி டீ விற்றதாக கூறியுள்ளார். மோடி தேர்தலில் தோல்வியடைந்தவுடன் அவர் குஜராத்துக்கும் பய்யாஜி ஜோஷி நாக்பூருக்கும் செல்ல வேண்டியதுதான் என்று தொகடியா தெரிவித்துள்ளார்.