பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘மிருகா’ படத்தின் திரைவிமர்சனத்தைப் பற்றி பார்ப்போம்.
கதைக்களம்
கணவனை இழந்தோ அல்லது கணவனை பிரிந்தோ தனியாக மற்றும் வசதியாக வாழும் பெண்களைக் குறி வைத்து காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் ஸ்ரீகாந்த். பின்பு இவர் பற்றி உண்மை அவர்களுக்கு தெரிய வரும்போது குடும்பத்துடன் அவர்களைக் கொன்றுவிட்டு தப்பிவிடுகிறார். இதேபோல் சுமார் 1000 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் கணவனை விபத்தில் இழந்து ஒரு பெண் குழந்தையுடனும், ஒரு தங்கையுடனும் வாழ்ந்து வருகிறார் ராய் லட்சுமி. இவரிடம் எக்கச்சக்க சொத்து இருப்பதால் இவரைத் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாக திட்டமிடுகிறார் ஸ்ரீகாந்த். அவர் எஸ்டேட்டில் மேனாஜராக பணியில் சேர்கிறார். இந்நிலையில், ராய் லட்சுமி எஸ்டேட்டில் அவ்வப்போது தனியாக நடமாடும் மனிதர்களை புலி ஒன்று வேட்டையாடி வருகிறது. புலியால் இனி ஒரு மனித உயிர் கூட போகக் கூடாது என்று ராய் லட்சுமியிடம் கூறுகிறார். ராய் லட்சுமியின் ஸ்ரீகாந்தின் மனிதாபிமானத்தைக் கண்டு அவர்மீது காதலில் விழுகிறார். இறுதியில், புலியிடமிருந்து மக்களைக் காப்பாற்ற ஸ்ரீகாந்த் எடுக்கும் முயற்சி வெற்றிபெற்றதா? ஸ்ரீகாந்த் திட்டமிட்டபடி ராய் லட்சுமியை மணந்து சொத்தை அடைகிறாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
பர்ஃபாமன்ஸ்
ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தை இன்னும் நன்றாக அமைத்திருக்கலாம். படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை ஒரே பாணியில் நடித்திருக்கிறார். ராய் லட்சுமி யதார்த்தமாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். புலியுடன் நடித்திருக்கும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் மனதில் நிற்கும்படியாக இல்லாமல் வந்து போகின்றன.
படத்தின் முதல் காட்சி இறுதி வரை எந்த காட்சியோடும் இணையாமல் துண்டாக நிற்கிறது. ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தை தெளிவாக வடிவமைக்கவில்லை இயக்குநர் பார்த்திபன். புலியைப் பற்றி இன்னும் நன்றாக தெரிந்து கொண்டு இயக்கியிருக்கலாம். இரண்டாம் பாதி ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே காட்சியை வைத்தே படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். கிளைமேக்ஸ் 1 மணி நேரமா என்று கேட்கும்படி இருக்கிறது.
அருள்தேவின் இசையும், எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவும் தேர்ச்சிப் பெறுகிறது.
சிறப்பம்சங்கள்
இசை
ஒளிப்பதிவு
பலவீனங்கள்
தெளிவில்லாத கதாபாத்திர அமைப்பு
நீளமான கிளைமாக்ஸ்