செல்வராகவன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா மற்றும் பலர் நடிக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் திரைவிமர்சனத்தைப் பற்றி பார்ப்போம்.
கதைக்களம்
நாயகன் எஸ் ஜே சூர்யா தன் முதலாளி மகளான நந்திதாவை நயவஞ்சமாக காதலித்து திருமணம் செய்து அவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தையை கவனித்துக் கொள்ள ரெஜினா வேலைக்கு சேர்கிறார். ரெஜினாவை அடைய நினைக்கும் எஸ் ஜே சூர்யா அவரை கற்பழித்து கொலையும் செய்கிறார். ரெஜினா ஆவியாக வந்து பழிவாங்கினாரா? எஸ்.ஜே.சூர்யா கொலை செய்தது தன் மனைவி நந்திதாவிற்கு தெரிந்ததா, தெரிந்த பிறகு என்ன முடிவு எடுத்தார் என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக எப்படி திரைக்கதை நகர்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
பர்ஃபாமன்ஸ்
எஸ்.ஜே.சூர்யா படத்தின் மொத்த பலத்தையும் தன் முதுகின் மேல் சுமந்திருக்கிறார். அவரைத் தவிர வேறு யாராலும் இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடியாது. வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்தில் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அப்படி ஒரு சவாலான கதாபாத்திரத்தை சாதாரணமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ரெஜினா அழுத்தமான கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார். நந்திதாவின் கதாபாத்திரமும் எஸ்.ஜே.சூர்யா மீதான கண்மூடித்தனமான காதலும் ரசிக்க வைக்கிறது.
முதல் பாதியை ரசிக்கும்படியாக எழுதி இயக்கியிருக்கும் செல்வராகவன், இரண்டாம் பாதியை எழுதி இயக்கியது அவர்தானா? என்ற கேள்வி எழுகிறது. முதல் பாதியில் ஏற்பட்ட எதிர்பார்ப்பு இரண்டாம் பாதியில் ஏமாற்றமடைய செய்திருக்கிறது. ரெஜினா கண்ணாடி பார்க்கும் போது ஒரு உருவம் எதற்காக வருகிறது? வேலைக்கு வரும் ரெஜினா காணாமல் போனதும் அதுபற்றி சிறிதும் கவலைக் கொள்ளாத ஏஜென்சி? சிறுவயது முதல் இவரை வளர்க்கும் ஆசிரமத்து சிஸ்டர் ரெஜினாவை தேடிவந்து போலீஸுக்கு போவேன் என்று செல்கிறார்? ஆனால், அதுபற்றி எந்த தகவலும் இல்லை. இப்படி பல கேள்விகளுக்கு படத்தில் பதிலில்லை. சிறந்த அனுபவசாலியான இயக்குநரின் படத்தின் இத்தனை சொதப்பல்களா? என்று கேள்விகளுக்குள் கேள்வி எழுகிறது.
யுவனின் இசை படத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது.
சிறப்பம்சங்கள்
இசை & பாடல்கள்
முதல் பாதி
பலவீனங்கள்
பலவீனமான திரைக்கதை
இரண்டாம் பாதி
கிளைமாக்ஸ்