புகழின் உச்சியில் கொடிகட்டிப் பறந்த இரண்டு குத்துச்சண்டைக் குழுக்களான சார்பட்டா பரம்பரை மற்றும் இடியப்ப பரம்பரை இடையேயான ரிங்கின் உள் நடக்கும் ரோசமான குத்துச்சண்டையும், வெளியே நடக்கும் சாதிய அரசியலையும் பேசியிருக்கும் திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா மற்றும் கபாலி என தொடர்ச்சியாக அரசியல் சார்ந்தப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித்தின் ஐந்தாவது உருவாக்கம் தான் ‘சார்பட்டா பரம்பரை’. வழக்கமான பா. ரஞ்சித் திரைப்படமாகவே மிளிர்கிறது.
கதை
இந்தியாவில் எமர்ஜென்ஸி காலக்கட்டத்தில் நடக்கும் கதைக்களம். சென்னையில் குத்துச்சண்டைப் போட்டியானது புகழின் உச்சியில் இருந்த காலகட்டம். பரம்பரை பரம்பரையாக மோதிக்கொள்ளும் சார்பட்டா பரம்பரைக்கும் இடியப்ப பரம்பரைக்கும் இடையிலான மோதல் தான் கதைக்கரு. தொடர்ச்சியாக கை ஓங்கியிருக்கும் இடியாப்பப் பரம்பரையை வீழ்த்த இறுதி வாய்ப்பில் நிற்கும் சார்பட்டா பரம்பரை ஜெயித்ததா, பாக்ஸிங் தெரியாத
கபிலனாக ஆர்யா எப்படி ரிங்கிற்குள் வந்தார், அதற்குள் நிகழும் தலித் அரசியல் என படத்தின் திரைக்கதை நீள்கிறது.
மிகப்பெரிய பாக்ஸரான கபிலனின் தந்தை க்ளவுஸை, விட்டுவிட்டு கத்தியை எடுத்ததால் கொல்லப்பட, ஆர்யாவை பாக்ஸிங் பக்கமே போகவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பார் கபிலனின் தாய். ஆனால், ரங்கன் வாத்தியாரின் (பசுபதி) சண்டைகளைப் பார்த்து வளர்வதால் கபிலனுக்கு (ஆர்யா) உள்ளுக்குள் பாக்ஸிங் வெறி ஓடிக்கொண்டே இருக்கும். தொடர்ச்சியாக இடியப்பப் பரம்பரை வேம்புலியிடம் (ஜான் கொக்கன்) அடிவாங்கி நாக் அவுட் ஆகிக் கொண்டிருக்கும் சார்பட்டா பரம்பரை. கடைசியாக ஒரு போட்டி, ஜெயிக்காவிட்டால் பாக்ஸிங்கை விட்டுவிடுவதாக சவால் விடுகிறார் சார்பட்டா பரம்பரை வாத்தியார் ரங்கன். வாத்தியாரின் வாக்குறுதியைக் காப்பாற்ற, பரம்பரையின் கெளரவத்தைக் காப்பாற்ற முன்பின் பாக்ஸிங் விளையாடாத கபிலன் ரிங்கிற்குள் வருகிறார். சார்பட்டா பரம்பரைக்குள்ளேயே கபிலனுக்கு எதிராக சாதியை முன்னிறுத்தி சதி வேலைகள் நடக்கிறது. அவற்றையெல்லாம் முறியடித்து இடியாப்ப பரம்பரையை தோற்கடிக்க கபிலன் எடுக்கும் முயற்சிகளே படத்தின் கதை.
முதல் பாதியில் இரண்டு பரம்பரைகளுக்கு நடுவிலான பாக்ஸிங் போட்டிகளே நிறைந்திருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் படுவேகமாக சீறிப் பாய்கிறது. அப்படியே, இரண்டாம் பாகம் கொஞ்சம் படத்தின் கதையிலிருந்து விலகிச்சென்று க்ளைமேக்ஸில் மட்டும் மீண்டும் அதிரடியாக கதைக்குள் வந்து சேர்கிறது.
பெர்பார்மென்ஸ்
கபிலனாக ஆர்யா உடல் மொழிக்கென நிறையவே உழைத்திருக்கிறார். மூன்று வித உடலமைப்புடன் நடித்து அசத்தியிருக்கிறார்.
ரங்கன் வாத்தியாரான பசுபதி, டேடி ரோலில் பட்லர் இங்கிலீஷ் பேசும் ஜான்விஜய், நடனமாடிக்கொண்டே சண்டைப்போடும் டான்சிங் ரோஸ் என ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமாக மனதில் பதிந்து விடுகிறது.
கபிலனின் மனைவியாக வரும் மாரியம்மாவிற்கு (துஷாரா) இது அசத்தலான அறிமுகம்.
பின்னணி இசையிலும், படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களிலும் வழக்கம் போல சந்தோஷ் நாராயணன் அசத்தியிருக்கிறார். சென்னையை லைவ்வாக கொண்டுவந்ததில் முரளியின் ஒளிப்பதிவுக்கும், ராமலிங்கத்தின் கலை இயக்கத்துக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.
ப்ளஸ்
ஆர்யாவின் நடிப்பு
பசுபதியின் எதார்த்தமான பர்பாமன்ஸ்
முரளியின் ஒளிப்பதிவு
மைனஸ்
நீளமான இரண்டாவது பாகம்
கலையரசன் மற்றும் ஆர்யாவிற்கு இடையிலான காட்சிகள்