திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அந்நாளில் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் செல்வார்கள்.
ஒவ்வொரு மாதமும் பல பக்தர்கள் இதனை கைவிடாமல் பின்பற்றி வருகிறார்கள். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல பேருந்துகள், கார்களில் சென்று வருகின்றனர். பொதுமக்கள் வசதிக்காக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் பவுர்ணமி அன்று திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.
வருகிற 13-ந்தேதி கிரிவலம் நடைபெறுகிறது. இதற்காக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.சென்னை கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ஆற்காடு, ஆரணி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் :- வருகிற 13-ந்தேதி பவுர்ணமி வருவதால் அன்று திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அன்று காலையில் இருந்து இரவு வரை பல்வேறு இடங்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும். பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார்.