சென்னை திரும்பியவுடன் மீண்டும் படப்பிடிப்பு தளத்தில் STR... மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு 'மாநாடு' படத்தின் வெற்றியை தொடர்ந்து புது உத்வேகத்துடன் காணப்படுகின்றார். இடையில் சில ஆண்டுகள் பல சர்ச்சைகளில் சிக்கி, உடல் எடை கூடி, பல விமர்சனங்களை சந்தித்த சிம்பு தற்போது தன் கடின உழைப்பால் மீண்டும் பழைய சிம்புவாக தன் டிராக்குக்கு திரும்பியுள்ளார்.

என்னதான் அவரது படங்கள் இடையில் சில ஆண்டுகள் வெளியாகாமல் இருந்தாலும் அவரது ரசிகர்கள் அவரை கைவிடாமல் அவருக்கு பக்கபலமாக இருந்தனர். எனவே தன் மீது அன்பு கொண்ட ரசிகர்களுக்காக சிம்பு மீண்டும் தன் உடல் எடையை குறைத்து சுறுசுறுப்பாக படங்களில் நடித்து வருகின்றார்.

கடந்தாண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று நூறு கோடி வசூல் சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார், கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல ஆகிய படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றார்.

இதில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பத்து தல படப்பிடிப்பில் இருந்து சிம்பு தன் தந்தை டி.ராஜேந்தருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் படப்பிடிப்பிலிருந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டு தன் தந்தையுடன் இருந்தார்.

மேலும் தன் தந்தையை அமெரிக்காவிற்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து சென்றார் சிம்பு. இதைத்தொடர்ந்து கடந்த வாரம் டி.ராஜேந்தர் பூரண குணமடைந்து தாயகம் திரும்பினார். அவருடன் நடிகர் சிம்புவும் சென்னை வந்தடைந்தார் .

இந்நிலையில் சென்னை வந்தடைந்த சிம்பு தற்போது மீண்டும் பத்து தல படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். மைசூர் அரண்மனையில் தற்போது சிம்பு நடித்து வரும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. எனவே சிம்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.