கேட்ஜெட்டுகளில் கலக்கி வந்த ஆப்பிள் நிறுவனம் இப்போது நிதி சேவையிலும் களம் கண்டுள்ளது. இன்று எந்தவொரு இ-காமர்ஸ் நிறுவனமும் நிதி சேவை வழங்கலாம் என்ற அளவுக்கு தொழில்நுட்பமும் நவீனமும் மாறிவிட்டது. இ-காமர்ஸ் உலகின் ஜாம்பவானாக இருக்கும் அமேசானின் வழியில் இப்போது ஆப்பிளும் தனக்கென தனி கிரெடிட் கார்ட் ஒன்றை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்ற ஆப்பிள் ஈவென்ட்டில் ஆப்பிள் நிறுவன சிஇஓ ‘ஆப்பிள் கார்ட்’ என்ற கடன் அட்டை சேவையை உலகுக்கு அறிவித்தார். ஆப்பிள் போன் வைத்திருக்கும் ஒருவர் இந்த சேவையைப் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் ஒப்புதல் பெற்றதுமே உங்களுடைய ஐபோனில் உள்ள ஆப்பிள் வாலட் செயலியில் ஆப்பிள் கடன் அட்டை சேமிக்கப்பட்டுவிடும். செயலியிலேயே கடன் அட்டையின் விவரங்கள், பர்ச்சேஸ் ஹிஸ்டரி, ஸ்டேட் மென்ட், தவணை தொகை, தவணை தேதி, கடன் அட்டையில் உள்ளிட்ட அனைத்துமே தெரிந்துகொள்ளலாம்.
பொதுவாக கடன் அட்டைக்கு 16 இலக்க எண்கள், வாலிட்டிட்டி முடியும் நாள், சிவிவி எண், கையெழுத்து ஆகியவை இருக்கும். ஆனால், இந்த ஆப்பிள் கடன் அட்டையில் அப்படி எந்தவொரு எண்ணுமே இருக்காது. ஆப்பிள் வாலட் மூலம் செய்யப்படும் பர்ச்சேஸ்களுக்கு இவை எதுவுமே தேவையில்லை. இது போன்ற பல சிறப்பம்சங்களுடன் இந்த 'ஆப்பிள் கார்ட்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.