சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பூலோக கைலாயமாக வியந்தோதி வணங்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சன விழா நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் மற்றும் அச்சம் காரணமாக ஆனி திருமஞ்சன விழா நடை பெறவில்லை. தற்போது இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா நடத்த கோவில் பொது தீட்சிதர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து தினமும் காலை, மாலை இரு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடந்தது. கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது. முன்னதாக அதிகாலை 5 மணியளவில் சித்சபையில் இருந்து சிவகாம சுந்தரி, நடராஜ மூர்த்தி சாமிகள் புறப்பட்டனர். அதன் பின்னர் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனியே புறப்பட்டன. 5 சாமிகளும் தேர் நிற்கும் இடமான கீழரத வீதிக்கு புறப்பாடு ஆகி வந்தனர். அங்கு தனித்தனித் தேரில் எழுந்தருளினர். 9 மணி அளவில் தேரோட்டம் நடந்தது.

கைலாய வாத்தியம் முழங்க பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேரினை வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் உலகம் முழுவதில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தேரோட்டத்தையொட்டி போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிதம்பரம் நகராட்சி
சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வசதியும் கழிவறை வசதியும் செய்யப்பட்டிருந்தது.