அரசுப் பேருந்தில் திடீர் விசிட் அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

இதனால், திமுக ஆட்சியின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு தாயார் தயாளு அம்மாவிடம் முதல்வர் ஆசி பெற்றார். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்த புறப்பட்ட நிலையில், தற்போது மெரினா கடற்கரைக்கு செல்லும் வழியில் முதல்வர் ஸ்டாலின், அரசு பேருந்தில் திடீரென ஏறி ஆய்வு மேற்கொண்டார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்ற திட்டத்தை திமுக அரசு அண்மையில் அறிவித்த நிலையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து சென்னை மெரினா நோக்கி செல்லக்கூடிய பேருந்தில் ஏறி முதல்வர் ஆய்வு செய்து,மகளிரிடம் இலவச பயண திட்டம் குறித்து கருத்துகளை கேட்டறிந்தார்.

அதன்பின்னர், பேருந்தில் இருந்து இறங்கி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்கு புறப்பட்டு சென்று தற்போது மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் அவர்கள், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.