மழைநீர் வடிகால் பணிகளை முடிப்பதற்கு கால நீட்டிப்பு கேட்கும் ஒப்பந்ததாரர்கள்

சென்னை உயர் நீதிமன்றத்தில் கிளாஸ் 1 ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவரான சென் வர்கீஸ் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பான 2019-2020ஆம் ஆண்டிற்கான ஒப்பந்தங்கள் இறுதிசெய்யப்பட்டு, அதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவுகள் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பிறப்பிக்கப்பட்டன.
டெண்டர் பணிகளை 6 முதல் 12 மாதங்களில் முடிக்க வேண்டுமென நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும், ஆனால் மார்ச் 3வது வாரத்திலிருந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆனால் 2020 மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை முழு ஊரடங்கு அமலில் இருந்ததால், ஒப்பந்தப்பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் வாழ்வாதாரத்திற்காகச் சொந்த ஊர்களுக்குப் சென்றதாகவும், பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் பொருட்கள் மற்றும் பணம் கொண்டு செல்வதில் சிரமம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு, தேர்தல், பணியாளர்கள் இல்லாமை போன்ற காரணங்களால் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை தங்கள் சங்க உறுப்பினர்களால் முடிக்க முடியாததால், 50 சதவீத கால அவகாசம் வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சியிடம் கடந்த அக்டோபர் மாதம் கோரிக்கை மனு அனுப்பியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு நேற்று (டிச.16) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சங்கம் தரப்பில் வழக்கறிஞர் வை.இளங்கோவன் ஆஜராகி தங்களைப் போலப் பாதிக்கப்பட்ட சாலைப் பணித் துறை சார்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால், மழை நீர் வடிகால் துறை சார்பான ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படவில்லை என வாதிட்டார். மேலும், பணியைக் குறிப்பிட்ட காலத்தில் முடிக்காதது தொடர்பாக அபராதம் வசூலிப்பதிலிருந்து மட்டும் தங்களுக்கு விலக்களிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். 

அதன் பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பணிகளை முடிப்பதற்கான கால நீட்டிப்பு கோரிய மனுவை நான்கு வாரங்களில் சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்கச் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்துள்ளார்.