புழுத்து வீணாய் போன அரிசி... தமிழக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. ஆட்சியில் சுமார் 9 லட்சம் டன் ரேஷன் அரிசி புழுத்துப்போய் வீணாகி விட்டதாக மத்திய அரசின் இந்திய உணவு கழகம் ஆதாரத்துடன் குற்றம் சாட்டி உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? என்றும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். 

இதற்கு பதில் அளித்து தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 92.50 கோடி கிலோ அரிசி மனிதர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதைப் பார்த்த இந்திய உணவுக்கழக அதிகாரிகள் இது போன்ற அரிசியை வழங்கிய அரிசி ஆலை முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த அரிசியை மனிதப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உண்மைக்குப் புறம்பான இந்த செய்தியை ஆராயாமல் அதையே அறிக்கையாக அவர் வெளியிட்டுள்ளார். இந்திய உணவுக் கழகத்திடமிருந்து வந்த கடித நகலை உங்களுக்குத் தருகிறேன். அதில் என்ன கூறியிருக்கிறது என்பதை நீங்களே படித்துப் பாருங்கள். கும்பகோணத்தில் 92.50 மெட்ரிக் டன், நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள் 92.50 மெட்ரிக் டன், அதாவது 92 ஆயிரத்து 500 கிலோ அரிசி. இதன் மதிப்பு சுமார் 33 இலட்சம் ரூபாய் ஆகும். இந்த அரிசியில் 5.2 % சேதமடைந்த அரிசி என்றும், 7 % பழுப்பு நிற அரிசி என்றும் சேதமடைந்த அரிசி 5 % விழுக்காடுக்கு மேல் இருக்கக் கூடாது; ஆனால் பழுப்பு நிற அரிசி 7 % இருக்கலாம் என்றும் 0.2 % கூடுதலாக சேதமடைந்து உள்ளது என்பதால் பொதுமக்களுக்கு அனுப்பக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கடைகளுக்கு இந்த அரிசி அனுப்பப்படவில்லை. இதோடு இந்த அரிசியை அனுப்பிய ஆலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பேனைப் பெரிதாக்கி பெருமாள் ஆக்கியது போல் 92,500 கிலோ என்பதை 9 இலட்சம் டன் அரிசி என்று ஒரு முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் அறிக்கை விடுகிறார் என்றால் என்னவென்று சொல்வது?

 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அரிசி ஆலை முகவர்கள் மற்றும் கழக ஆலைகள் மூலம் அரைத்த அரிசியின் தற்போதைய இருப்பே 3 இலட்சத்து 23 ஆயிரத்து 554 டன்தான். தஞ்சாவூரில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜிடம் உண்மை நிலை என்னவென்று கேட்டிருக்கலாம் அல்லது வைத்தியலிங்கமிடம் கேட்டிருக்கலாம்.

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியைத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி வகித்த பதவிக்கும் தற்போது வகிக்கும் பதவிக்கும் இது அழகல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பதில் அளித்திருக்கிறார்.