அரசு பஸ் கண்டக்டர்கள் பணியின் போது செல்போன் பார்த்தால்... போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கண்டக்டர்கள் பயணச்சீட்டு வழங்கிவிட்டு முறையாக ஸ்டாப்பிங்கை கூட அறிவிக்காமல் முன்புற இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்போனில் நிகழ்வுகளை பார்த்தவண்ணம் இருப்பது அல்லது தூங்கியபடி இருப்பதாக பயணிகளிடம் இருந்தும், பயிற்சிக்கு வரும் டிரைவர்களிடம் இருந்தும் புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இச்செயல் மிகவும் வருந்தத்தக்கதாகும். எனவே நமது கண்டக்டர்கள் பகல் பணியின்போது பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கிவிட்டு பயணிகள் மற்றும் தங்களது பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பஸ்களின் இரு படிக்கட்டுகளும் தங்களது பார்வையின் கட்டுப்பாட்டில் இருக்கும்படி பஸ்சின் பின்பக்கத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் இருந்து பணிபுரிய வேண்டும். இரவுநேர நீண்டதூர வழித்தடங்களில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கிவிட்டு பஸ்சின் முன்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்து டிரைவர் விழிப்புணர்வுடன் பேருந்தை இயக்கும்வண்ணம் நடந்துகொள்ளவும், செல்போனில் நிகழ்வுகளை பார்ப்பதை முற்றிலும் தவிர்க்கவும் வேண்டும். பஸ் வழித்தட பரிசோதனையின்போது இந்தக் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும்.

இதுதொடர்பாக அனைத்து கிளை மேலாளர்களும் கண்டக்டர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு போக்குவரத்துத்துறை அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.