இரண்டாவது டி20 போட்டியிலும் வெற்றி... தொடரை கைப்பற்றிய இந்தியா!

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதால் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று (ஜூன் 28) இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி இந்திய அணியின் சார்பில் முதலாவதாக சஞ்சு சாம்சன் - இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர்.

இந்த ஜோடியில் இஷான் கிஷன் 3 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக சாம்சனுடன், தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. அதிரடியில் மிரட்டிய தீபக் ஹூடா மற்றும் சாம்சன் ஆகியோர் தங்களது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினர்.

இந்த ஜோடியில் சிறப்பாக ஆடி வந்த சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து தீபக் ஹூடாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து அதிரடி காட்டி வந்த தீபக் ஹூடா 55 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் அதிரடியாக துவங்கிய சூர்யகுமார் யாதவ் 15 ரன்களில் வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து தீபக் ஹூடாவும் 57 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் (0), அக்சர் பட்டேல் (0), ஹர்சல் பட்டேல் (0) ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

இறுதியில் புவனேஷ்வர் குமார் ஒரு ரன்னும், ஹர்த்திக் பாண்டியா 15 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது.

அயர்லாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக மார்க் ஆதிர் மூன்று விக்கெட்டுகளும், கிரீக் யங் மற்றும் ஜோஸ்வா லிட்டில் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 228 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணியின் சார்பில் பால் ஸ்ட்ர்லிங் மற்றும் கேப்டன் பால்பேர்னே ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக ரன் குவிப்பில் இந்த ஜோடி ஈடுபட்டது. இந்த ஜோடியில் பால் ஸ்ட்ர்லிங் 40 (18) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டிலேனி (0) ரன் ஏதும் எடுக்காமலும், மறுமுனையில் சிறப்பாக ஆடிய பால்பேர்னே 34 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்திருந்த நிலையில் 60 (37) ரன்களிலும், லார்சன் டூக்கர் 5 ரன்களிலும் வெளியேறினர்

அடுத்ததாக ஹேரி டெக்டாருடன், ஜார்ஜ் டாக்ரெல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ஆடி, ரன் சேர்ப்பில் ஈடுபட்டு வந்த டெக்டார் 39 (28) ரன்களில் கேட்ச் ஆனார். இறுதியில் அதிரடியில் மிரட்டிய ஜார்ஜ் டாக்ரெல் 24 (16) ரன்களும், மார்க் ஆடைர் 23 (12) ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல், பிஸ்னோய் மற்றும் உம்ரன் மாலிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று டி20 தொடரையும் கைப்பற்றியது.