டெல்லி: இந்திய பொருளாதாரம், 2018-19ல் தொடர்ந்து வேகமாக வளரும் என்று உலக வங்கி கணித்துள்ளது. இதுகுறித்து உலக வங்கி தனது ஆய்வு அறிக்கையை நேற்று வெளியிட்டிருந்தது. அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்: இந்தியாவில், நடப்பு நிதியாண்டில்,
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), 7.3 சதவீத வளர்ச்சியில் இருக்கும். அடுத்த இரு நிதியாண்டுகளில் இது 7.5 சதவீதம் அளவுக்கு உயரக்கூடும். அதேநேரம், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதமாக இருக்கும்.
ஊக்கம்
ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு போன்ற இந்திய அரசின் சமீபகால நடவடிக்கைகள், அமைப்பு சாராமல் இருந்து வந்த துறைகளை, அமைப்புக்கு உள்ளே கொண்டுவர ஊக்கம் தரக்கூடியவை. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க முக்கிய காரணம், முதலீடு மற்றும் நுகர்வு ஆகியவையாகும். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அறிமுகத்தால் தற்காலிகமாக மந்தநிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இனி வேகம் பிடிக்கும்.
சீனா நிலை
சீனா 2019-20ம் நிதியாண்டில், 6.2 சதவீதம் அளவுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை கொண்டிருக்கும். 2021ல் இது மேலும் குறைந்து 6 சதவீதம் என்ற அளவில் இருக்கும். 2018-19ம் நிதியாண்டில், சீனாவின் ஜிடிபி 6.5 சதவீதமாக இருக்கும். இந்தியாவை பொறுத்தளவில் அதன் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கப்போவது நுகர்வு அதிகரிப்புதான்.
பாகிஸ்தான் நிலைமை
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது நம்மைவிட கிட்டத்தட்ட பாதியாகத்தான் இருக்கும். 2018-19ம் நிதியாண்டில், பாகிஸ்தானில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.7 சதவீதமாக இருக்கும். வங்கதேசம் இதே நிதியாண்டில் 7 சதவீத ஜிடிபியுடன் வளர்ச்சி பெறும். இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 4 சதவீதமாக இருக்கும்.