யூரோ கோப்பையை வென்றது இத்தாலி!

யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இத்தாலி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இத்தாலியின் ரோம் நகரில் கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதியன்று தொடங்கிய 16-வது யூரோ கால்பந்து போட்டி தொடரில், 24 நாடுகள் பங்கேற்றன. லீக் மற்றும் நாக்அவுட் சுற்று முறையில் நடைபெற்ற இந்த போட்டிகளில் ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, டென்மார்க் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதியில் இத்தாலி அணி ஸ்பெயினையும் நேருக்கு நேர் மோதி வீழ்த்தியது. இங்கிலாந்து அணி டென்மார்க்கை தோற்கடித்தது .
லண்டன் நகரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இத்தாலி, இங்கிலாந்து அணிகள் மோதின.  முதல் முறையாக யூரோ கோப்பையை வெல்லும் முனைப்பில், இங்கிலாந்து அணி உள்ளூர் ஆதரவாளர்களுடன் களம் இறங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா கோல் அடித்தார். தொடர்ந்து 67வது நிமிடத்தில் இத்தாலி அணி லியனார்டோ பொனுச்சி கோல் அடித்து சமன் செய்தார்.

தொடர்ந்து இரண்டாவது கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இரு அணிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை. இதனால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதிலும், இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் இங்கிலாந்தின் கடைசி 2 பெனால்டி வாய்ப்பை இத்தாலி வீரர் டொனருமா  அபாரமாக தடுக்க, அந்த அணி 3க்கு2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. 53 ஆண்டுகளுக்குப் பிறகு யூரோ கோப்பையை வென்ற இத்தாலி அணிக்கு இந்திய மதிப்பில் 89 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

தொடரின் சிறந்த வீரருக்கான விருதை இத்தாலி கோல் கீப்பர் டொனருமா வென்றார். அதிக கோல்கள் அடித்த போர்ச்சுலைச் சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கோல்டன் பூட் விருது வழங்கப்பட்டது. சிறந்த இளம் வீரருக்கான விருதை பெட்ரியும், சிறந்த கோல் கீப்பருக்கான விருதை இங்கிலாந்தின் பிக்போர்டும் வென்று அசத்தினர்.