சென்னையில் கட்சி ஆபீசுக்காக இடம் தேடும் ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க.வுக்கு சென்னை ராயப்பேட்டையில் தலைமைக்கழக அலுவலகம் உள்ளது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் பெயரில் இருந்த அந்த கட்டிடத்தை அவர் கட்சிக்காக வழங்கினார். எம்.ஜி.ஆர். காலத்தில் அந்த கட்டிடம் அ.தி.மு.க.வின் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளுக்கும் மையமாக திகழ்ந்தது. அ.தி.மு.க.வில் முன்னர் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக இரண்டு தடவை அந்த அ.தி.மு.க. அலுவலகம் சீல் வைக்கப்பட்டு மீண்டும் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து 3-வது முறையாக அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால் கோர்ட்டு மூலம் அந்த தடையை உடைத்து அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி அணியினர் தங்கள் வசமாக்கி உள்ளனர். ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி வரை அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் யாரும் செல்லக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்பிறகு எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் மீண்டும் அங்கு சென்று கட்சி பணிகளை தொடங்க உள்ளனர்.

அ.தி.மு.க. தலைமைக் கழகத்தை சட்ட ரீதியாக இழந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு சென்னையில் தற்போது எந்த இடத்திலும் அலுவலகம் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் தான் அடிக்கடி கூடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக அந்த சந்திப்பும் நின்று போனது. இதனால் கட்சி பணிகளை மேற்கொள்ள புதிதாக ஒரு இடத்தில் அலுவலகத்தை உருவாக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கருதுகிறார்கள்.

இதற்காக சென்னையில் பல்வேறு இடங்களிலும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அலுவலகம் தேடி வருகிறார்கள். உரிய இடம் கிடைத்ததும் அங்கு கட்சி தலைமை அலுவலகத்தை தொடங்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு உள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் கோர்ட்டு மூலம் மாறுபட்ட தீர்ப்புகள் வரும் பட்சத்தில் புதிய அலுவலகத்தில் இருந்து போட்டி அ.தி.மு.க.வை இயக்க ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் வியூகம் வகுத்து உள்ளனர். இதை கருத்தில் கொண்டு புதிதாக அமைக்கப்பட இருக்கும் கட்சி அலுவலகத்துக்கு நிர்வாகிகளை தினமும் வரவழைத்து ஆலோசனை நடத்த முடிவு செய்து உள்ளனர்.