எரியும் கொள்ளிக் கட்டையை விழுங்கும் பூசாரி- வரம் கேட்க குவிந்த பக்தர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாந்தாங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அக்கினி காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தாண்டு திருவிழா கடந்த 15-ந்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நிகழ்வான இன்று பால்குடம், காவடி, கரகம், மதுக்குடம் மற்றும் மதலை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் பூசாரியான மாரிமுத்து என்பவர் பெண் வேடம் அணிந்து சாமி ஆடி பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினார். இதனை பக்தர்கள் கண்டு வியந்தனர்.

அப்போது எரியும் கொள்ளிக்கட்டையை வாயில் வைத்து கடித்து அதிலிருந்த நெருப்புக்கங்கை விழுங்கும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் காலில் நெருப்பை தோய்த்தும், தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அக்கினி காளியம்மனை வழிபட்டனர். முன்னதாக வாரத்தில் 3 தினங்களில் அருள் வாக்கு கூறுவதும், அது பக்தர்களுக்கு பலித்து வருகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் அம்மனுக்கு விரதமிருந்து காணிக்கை செலுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.