டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகினார் ரோஜர் பெடரர்!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டித் தொடர் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. கொரோனா பரவல் வேகத்தை கருத்தில் கொண்டு டென்னிஸ் உலகின் ஜாம்பவான்களான நடால், செரீனா வில்லியம்ஸ், டொமினிக் தீம் உள்ளிட்ட பல்வேறு வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கப் போவது இல்லை என அறிவித்துள்ளார். விம்பிள்டன் டென்னிஸில் காலிறுதியில் காயம் காரணமாக வெளியேறிய ரோஜர் பெடரர், பிரெஞ்ச் ஓபன் தொடரிலும் பங்கேற்கவில்லை. காயம் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பல்வேறு போட்டிகளில் அவர் கலந்துகொள்ளாதநிலையில், தற்போது ஒலிம்பிக்கில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், விம்பிள்டன் தொடரின்போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகுவதாகவும், இது தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் கூறியுள்ளார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான பெடரர், ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவு டென்னிஸில் இதுவரை பதக்கம் எதுவும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.