யூரோ 2020 அரையிறுதியில் ஸ்பெயின்: போராடி தோற்ற சுவிட்சர்லாந்து!!

யூரோ 2020 நேற்று நடந்த முழு நேர ஆட்டத்தில் 8வது நிமிடத்தில் ஸ்பெயினின் ஒரு கார்னர் கிக் மார்க் செய்யப்படாத வீரரிடம் வர அவர் கோலை நோக்கி அடித்த ஷாட்டை திசைத்திருப்பி விடும் முயற்சியில் சுவிட்சர்லாந்து வீரர் சகாரியா தங்கள் கோலுக்குள்ளேயே அடிக்க சேம்சைடு கோலினால் ஸ்பெயின் 1-0 என்று முன்னிலை பெற்றது.

தேவையில்லாமல் ரெஃப்ரி, சுவிட்சர்லாந்து வீரர் ரிமோ ஃப்ராய்லருக்கு ரெட் கார்டு காட்டி வெளியேற்ற சுவிஸ் அணி 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டது. அது அவ்வளவு பெரிய குற்றம் இல்லை. மேலும் வீடியோவில் சரிபார்த்து நடுவர் உறுதி செய்திருக்க வேண்டும், ஆனால் ஸ்பெயின் வீரர் கீழே விழுந்து புரண்டவுடன் ரெப்ரி வந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது சுவிட்சர்லாந்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
ஆனால் இடைவேளைக்குப் பிறகு 68வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் மெஸ்ஸி என்று அழைக்கப்படும் செட்ரான் ஷகீரி அபாரமாக ஒரு கோலைத் திருப்ப ஆட்டம் முழு நேரத்தில் 1-1 என்று சமன் செய்யப்பட்டது. தொடர்ந்து கூடுதல் நேரத்தில் விளையாடவும் வழி வகுத்தது.

கூடுதல் நேரத்தில் ஸ்பெயினின் தாக்குதல் ஆட்டத்தில் சுமார் 12 கோல் போடும் முயற்சிகளை சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் சோமர் அயராது தடுத்தார். இது தற்போது ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயின் வீரர்கள் செர்ஜியோ பஸ்கெட்ஸ் மற்றும் ரோட்ரி ஆகியோர் பதற்றத்தில் கோல்களைத் தவற விட்டனர், ஒன்றை சோமர் அபாரமாகத் தடுக்க ஒரு ஷாட் கோல் போஸ்ட்டில் பட்டு திரும்பியது, ஆனால் ஸ்பெயின் அணியில் ஜெரார்ட் மொரீனோ, டேனி ஆல்மோ தங்கள் ஷூட்டை சரியாக கோலாக மாற்ற கடைசி ஷாட்டை மிகேல் ஆயர்சபால் கோலுக்குள் திணிக்க ஸ்பெயின் 3-1 என்று வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே ஸ்பெயின் அணியின் ஆதிக்கம் தலை தூக்கியது. 25 நிமிடங்களிலேயே 209 பாஸ்களுடன் ஸ்பெயின் முன்னிலை பெற்றது. சுவிட்சர்லாந்து 40 பாஸ்களையே மேற்கொண்டது.