முதல்வர் துவக்கி வைத்த ஊட்டி மலர் கண்காட்சி: திடீரென உயர்த்தப்பட்ட பூங்கா நுழைவுக் கட்டணம்

நூற்றாண்டுச் சிறப்பு வாய்ந்த ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறவிருக்கும் 124-வது மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

லட்சக்கணக்கான மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு மலர் அலங்காரங்களையும், மலர் மாடங்களை அலங்கரிக்கும் பல லட்சம் பூக்களையும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்துச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் இடைவிடாது கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் முடங்கிக் கிடந்த சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் மலர் கண்காட்சியை காண படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பூங்கா நுழைவுக் கட்டணத்தை திடீரென உயர்த்தி அதிர்ச்சி கொடுத்திருக்கிறது பூங்கா நிர்வாகம். அரசு தாவரவியல் பூங்காவில் நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.50-ம், சிறியவர்களுக்கு ரூ.30-ம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், 5 நாள்கள் மலர் கண்காட்சியில்
பெரியவர்களுக்கு ரூ.100-ம், சிறியவர்களுக்கு ரூ.50-ம் உயர்த்தி வசூலித்து வருகின்றனர்.

இது குறித்து உதகை நகர விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் ஜனார்த்தனன், ``இந்த திடீர் கட்டண உயர்வு சுற்றுலாப் பயணிகளை பாதிக்கும். அதேவேளையில், உள்ளூர் மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது. ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இந்த தாவரவியல் பூங்கா ஊட்டியில் அமைந்திருந்தாலும், மலர் கண்காட்சி நடக்கும் சமயங்களில் மட்டுமே உள்ளூர் மக்களும், சாமான்ய மக்களும் குடும்பத்துடன் வந்து ரசித்துச் செல்கின்றனர். இந்த நிலையில், கட்டணத்தை திடீரென உயர்த்தியிருப்பது கசப்பான செய்தியாக இருக்கிறது. கட்டணத்தை உயர்த்திய பூங்கா நிர்வாகம் பூங்காவில் பணியாற்றும் கடைநிலை தொழிலாளர்களுக்கு எந்தவித வசதிகளையும் செய்து கொடுப்பதில்லை. கட்டணத்தை உயர்த்தி உள்ளூர் மக்களை புலம்ப வைத்திருக்கிறார்கள்" எனக் குற்றம் சாட்டினார்.

இந்த திடீர் கட்டண உயர்வு குறித்து பூங்கா அதிகாரிகளிடம் கேட்டபோது, ``தோட்டக்கலை மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு காரணமாக திடீரென உயர்த்த வேண்டியதாகிவிட்டது. எங்களுக்கு எதுவும் தெரியாது" என பதிலளித்து வருகின்றனர்.