இளம் வயது,,, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த டென்னிஸ் வீராங்கனை

"என்னுடைய மற்ற கனவுகளை நோக்கி பயணிக்கப் போகிறேன். ஒரு டென்னிஸ் வீராங்கனையாக அல்ல; சாதாரண மனிதனாக"
இவ்வாறு, இவ்வளவு சீக்கிரமாய் தன் டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை ஆஷ்லே பார்டி எழுதி முடிப்பார் என எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இளம் வயது. வெறும் 25 தான் ஆகிறது. ஆனால் அதற்குள் ஓய்வை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் அமிழ்த்தி இருக்கிறார் டென்னிஸ் வீராங்கனை பார்டி

நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி ஆஸ்திரேலிய பூர்வகுடி. அவர் ஒரு சூறாவளி. ஆம். டென்னிஸ் அரங்கில் திடீரென எழுச்சியுற்று, அடுத்தடுத்து மகுடம் சூடி, தன் பெயரை உலகெங்கும் உச்சரிக்க வைத்த சூறாவளி, ஆஷ்லே பார்டி.

பொதுவாக டென்னிஸில் களிமண் தரையில் சிறப்பாக ஆடுவோர் புல்தரையில் சறுக்குவர். ஒருவேளை புல்தரையில் கெத்து காட்டினால் செயற்கைத் தரையில் கோட்டைவிடுவர். ஆனால் ஆஷ்லே பார்டியோ களிமண் தரை, புல்தரை, செயற்கைத் தரை என முப்பரிமாணத்திலும் மிரட்டியவர்.


2010-ம் ஆண்டு சர்வதேச டென்னிஸூக்குள் நுழைந்து, தனிப்பட்ட விருப்பத்தால் 2016-ம் ஆண்டு பிக்-பேஷ் கிரிக்கெட்டில் பங்கேற்றார் பார்டி. பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. டென்னிஸ்தான் நமக்கு ஏற்றது எனத் தோன்றியிருக்கும் போலும். மீண்டும் டென்னிஸ் ராக்கெட்டைத் தூக்கி களமாடிய பார்டி, குறுகிய காலத்திலேயே டென்னிஸ் உலகின் புகழ் வெளிச்சத்தை பூரணமாய் கிரகித்துக் கொண்டார்.

ஆடவர் டென்னிஸைப்போல் மகளிர் டென்னிஸில் பிரபலங்களின் பெயர்கள் நிலைப்பதில்லை. முன்பு வீனஸ், செரீனா, ஷெரபோவாவின் பெயர்கள் நிலைத்தன. இடைப்பட்ட நாட்களில் அப்படி யாரும் நிலைக்கவில்லை. இப்போது பார்டி அந்த இடத்திற்கு வந்திருந்தார். துரதிர்ஷ்டம். ஓய்வை அறிவித்துவிட்டார். 

களத்தில் எப்போதுமே ஆச்சரியங்களை அளிக்கும் பார்டி இளம் வயதிலேயே ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.