மழையால் நடந்த டிவிஸ்ட்... தென்னாப்பிரிக்கா- இந்தியா இடையிலான டி 20 போட்டியில் சுவாரசியம்!!

பெங்களூரு மைதானத்தில் நேற்று (ஜூன் 19) இரவு தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் ஐந்தாவது டி20 போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது. இதனால் கோப்பையை இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் பகிர்ந்து கொண்டன.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்னாப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்தது.

இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற இருந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி பேட்டிங் செய்ய இருந்தது.

இந்தப் போட்டி தொடங்குவதில் மழை காரணமாக முதலில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் 19 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டு 7.50 மணிக்குத் தொடங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன் முதல் ஓவரில் 2 சிக்சர்களை அடித்தார். பின்னர் நிகிடி பந்துவீச்சில் 15 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ருதுராஜ் 10 ரன்களில் வெளியேறினார்.

இந்திய அணி 3.3 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் மீண்டும் போட்டி தடைப்பட்டது. களத்தில் ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் இருந்தனர். மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்த காரணமாக போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளும் தங்களுக்குள் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நேற்றைய (ஜூன் 19) போட்டி தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியாக இருந்தது. இந்த நிலையில் போட்டி கைவிடப்பட்டதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.