கோலிவுட், டோலிவுட், பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட் வரை கலக்கி வரும் நடிகர் தனுஷ், அவெஞ்சர்ஸ் எண்டு கேம் படத்தின் இயக்குனர் சகோதரர்களான ரூஸோ ப்ரதர்ஸ் இயக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவந்த அதிரடி ஆக்சன் திரைப்படமான தி க்ரே மேன் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்து ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த வரிசையில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் வாத்தி (SIR). தனுஷுடன் இணைந்து சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
வாத்தி படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றனர். ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வாத்தி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தனுஷின் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது. டீசர் நாளை ஜூலை 28ம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றிலும் புத்தகங்கள் நிறைந்து.. லைட் லேம்ப்பின் வெளிச்சத்தில், ஆழமாக எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பது போல தனுஷ் அமர்ந்திருப்பதாக இந்த லுக் அமைந்திருக்கிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.