சென்னை வரும் பிரதமர் மோடியை சந்தித்து பேசவிருப்பது யார்? எடப்பாடி-ஓ.பி.எஸ். இடையே போட்டி

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளை பா.ஜனதா தலைவர்கள் தலையிட்டு தீர்த்து வைப்பதாக பேச்சுகள் கிளம்பும். அதை உறுதிப்படுத்தும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது மோடியின் வேண்டுகோளை ஏற்றுத்தான் போராட்டத்தை கைவிட்டதாக வெளிப்படையாகவே அறிவித்தார்.

இப்போதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை யுத்தத்தில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கினாலும் சட்ட ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் ஓ.பன்னீர்செல்வமும் கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். அன்று புதுவை மாநிலத்தில் அரசு விழாவில் பங்கேற்கும் மோடி மறுநாள் மாலையில் (28-ந்தேதி) நேரு விளையாட்டரங்கில் முதல் முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருவரிடமும் மோடி நல்ல நட்புடன் இருக்கிறார். ஏற்கனவே சென்னை வந்தபோது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் விமான நிலையத்தில் சந்தித்து கட்சி பிரச்சினைகள் பற்றி விவாதித்து சில ஆலோசனைகள் கூறியிருந்தார். இப்போது எடப்பாடி பழனிசாமி தனக்கு இருக்கும் ஆதரவை சுட்டிக்காட்டி பா.ஜனதாவின் ஆதரவை தன் பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதால் அ.தி.மு.க. சார்பில் அவரை சந்திப்பதை மோடி தவிர்க்க வேண்டும் என்பதையும் எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். இது தொடர்பாக டெல்லியில் காய்கள் நகர்த்தப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

தமிழக பா.ஜனதாவை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலா ஆகியோர் தனித்தனியாக இருப்பது கூட்டணி வெற்றியை பாதிக்கும். எனவே அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் வழிமுறைகளை காண வேண்டும் என்று விரும்புகிறது. அதனால் தான் அண்ணாமலையும் இருவரிடமும் ஒரே நிலைப்பாட்டை கடைபிடித்து வருகிறாராம்.